வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய வாகனங்கள் கையளிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

வன யானை மேலாண்மை மற்றும் ஏனைய களப்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்காக புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட 16 டபிள் கெப் (Double Cab) வாகனங்கள் மற்றும் 181 மோட்டார் சைக்கிள்கள் அத்திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் இன்று (24) பத்தரமுல்லையில் அமைந்துள்ள திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
யானை-மனித மோதல்கள் மற்றும் வனச்சேதங்கள் அதிகமாகப் பதிவாகும் பிரதேசங்களில் உள்ள வனச்சரக அலுவலகங்களுக்கு இவ்வாகனங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 16 டபிள் கெப் வாகனங்களும் 40 மோட்டார் சைக்கிள்களும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்கவிடம் அமைச்சரினால் அடையாளப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நாளில் அதிக அளவிலான வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாக இன்றைய நாள் அமைகின்றது என்றார்.
யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்துவதில் நிலவிய மனிதவள மற்றும் பௌதிக வளப் பற்றாக்குறையைக் கண்டறிந்து, அதற்காகச் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 5,000 பேரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் நிலவிய தவறான அரசியல் முறைமையினாலேயே இந்த யானை-மனித மோதல் தீவிரமடைந்ததாகவும், காடுகளை அழித்தலும் யானைகளின் வாழ்விடங்களை இழக்கும் வகையில் குடியிருப்புகளை அமைத்தலுமே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அதுவரை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த முறைசாரா அபிவிருத்திகளுக்கும் யானைகளின் வாழ்விடங்களை அழிக்கும் திட்டங்களுக்கும் முற்றாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ் 86 காடுகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.


