ஹோமாகம ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து: ஐவர் பலி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மட் (தலைக்கவசம்) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த கருப்பு புகையால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ள நிலையில், இத்தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ மிக வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கொழும்பு தீயணைப்பு சேவைத் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், கட்டிடத்திற்குள் வேறு யாராவது சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் அதனால் ஏற்பட்ட சொத்து சேதங்களின் அளவு தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

