அனுர அரசின் 2027 வரவுசெலவுத் திட்ட கால அட்டவணை வெளியீடு – நவம்பரில் பட்ஜெட் தாக்கல்
Meiveli Media Team

மத்திய திறைசேரி, 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாகஇ ஒக்டோபர் 18ஆம் திகதி சட்டமூலம் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அமைச்சரவையின் அனுமதியும் பெறப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதி முன்னுரிமைகள் இந்த வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. பின்னர், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திருத்தங்கள் தொடர்பான குழுநிலை விவாதங்கள் டிசம்பர் 14ஆம் திகதி வரை தொடரும். சுமார் 30 நாட்கள் நடைபெறும் இந்த விவாதங்களின் பின்னர், வரவுசெலவுத் திட்டம் இறுதியாக நிறைவேற்றப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கச் செலவீனங்களுக்கு தேவையான நிதியை திறைசேரியிலிருந்து விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிடவுள்ளதாக மத்திய திறைசேரி தெரிவித்துள்ளது.

