தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய கூட்டணி; எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமை காரணமாக எழுந்துள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மலையகத் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்காகவே இந்த புதிய கூட்டணி கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் பேச்சுவார்த்தைகளில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பி. திகாம்பரம் ஆகியோரின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகவும், தமிழ் பேசும் மக்களின் நியாயமான பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதே இக்கூட்டணியின் பிரதான நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டணியின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிக் குழுவிற்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், இக்குழுவினர் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அவர் எப்போதும் இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்தும் முஜிபுர் ரஹ்மான் ஆளுங்கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகள் மற்றும் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், முதலாம் நாளிலேயே மோதலில் ஈடுபட்ட கைதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தால், இரண்டாவது நாளில் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்றார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாகக் கூறினாலும், அவரிடம் அதற்கான பொறுப்புக்கூறல் இல்லை என விசனம் வெளியிட்ட அவர், சிறைச்சாலை நெருக்கடிகளைத் தணிக்க அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அரசாங்கம் அதிகபட்ச இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முயல்வது நீதித்துறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நிலவும் ஆசிரியர், மருத்துவர் மற்றும் பொறியியலாளர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஒரு துறைக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏனைய துறையினரிடையே பாரிய அதிருப்தியை தோற்றுவிக்கும் என்றார்.

அதேநேரம், சஜித் பிரேமதாச பாதாள உலகக் குழுக்களிடம் பணம் பெற்று மக்கள் சேவை செய்வதாக ஆளுங்கட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்திப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அத்தகைய பணத்தில் இயங்கும் கட்சி அல்ல என்றும், தைரியமிருந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முறைப்பாடு செய்யட்டும் என சவால் விடுத்தார்.

புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, தற்போதும் பழைய அரசாங்கங்களின் காட்டுமிராண்டித்தனமான அரசியல் பாணியையே பின்பற்றுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.