கம்பஹாவில் கொழும்பை விட டெங்கு பரவல் அதிகரிப்பு: நாடு முழுவதும் 66,000 கடந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளும் நிரம்பின…!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் தற்போது டெங்கு நோய் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து 1,302 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர விசேட ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இந்த ஜூலை மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் 1,685 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 46 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மரண வீதமானது 0.07 வீதமாகக் காணப்படுகிறது.
நாட்டில் பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.7 வீதமானோர் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர். இதில் விசேடமாக, இதுவரை காலமும் கொழும்பிலேயே அதிக பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது கம்பஹா மாவட்டம் கொழும்பு மாவட்டத்தை முந்திச் சென்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 20.52 வீதமும், கொழும்பு மாவட்டத்தில் 20.22 வீதமும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேநேரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் முன்னதாக 18 வீதமாக இருந்த பாதிப்பு தற்போது 15.7 வீதமாகவும், சபரகமுவ மாகாணத்தில் 9 வீதமாக இருந்த பாதிப்பு 7.4 வீதமாகவும் சற்றுக் குறைவடைந்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஐ.டி.எச் (IDH), களுபோவில, ராகம, ஹோமாகம, பாணந்துறை மற்றும் மாத்தறை ஆகிய முக்கிய வைத்தியசாலைகளின் பொதுப் பிரிவுகள் மற்றும் சிறுவர் பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளன.
பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை அங்குள்ள கட்டில்களின் கொள்ளளவை விட இரண்டு மடங்காகக் காணப்படுகிறது. குறிப்பாக, நோய்த்தாக்கத்தின் தீவிரத்தன்மையால் 4 முதல் 6 நாட்களில் ஏற்படும் நீர் கசிவு நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஐ.டி.எச், ராகம, களுபோவில போன்ற வைத்தியசாலைகளில் பிரத்தியேக டெங்கு வார்டுகள் உருவாக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஐ.டி.எச் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, அங்குள்ள பிற நோயாளர்கள் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினர், பொலிஸார், பிரதேச செயலர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த 5 நாட்கள் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் இறுதி நாளான நேற்று, மேல் மாகாணத்தின் 23 சுகாதார அதிகாரி பிரிவுகளில் உள்ள 5,953 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 1,685 வளாகங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதுடன், 158 இடங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கமைய, குறைபாடுகள் காணப்பட்ட 111 வளாகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், விதிகளுக்கு முரணாகச் செயற்பட்ட 98 வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகளின் ஆயுட்காலம் ஒரு மாதம் என்பதால், புகை விசிறல் மூலம் பறக்கும் நுளம்புகளை அழித்தாலும், அவை முட்டையிடும் புழு நிலைகளை அழிப்பது மிகவும் அவசியமாகும் என வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.
நுளம்புகள் முட்டையிடுவதற்கு 10 முதல் 15 மில்லிலீட்டர் அளவிலான மிகச் சிறிய நீர் தேக்கமே போதுமானது என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறமுள்ள நீர்த்தேங்கும் தட்டுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் இடங்களை முழுமையாகத் துப்புரவு செய்து, இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்

