நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் நலன் குறித்து நீதி அமைச்சர் நேரில் ஆராய்வு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலன்களைக் கண்டறிவதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான ஏனைய வசதிகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இச்சம்பவத்தில் காயமடைந்த 54 கைதிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.