டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் தோல்வி: ஐக்கிய மக்கள் சக்தி சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இன்று (03) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் பெரும் செலவில் அதனை செயற்படுத்திய போதிலும், தற்போது டெங்கு பேரழிவு நாடளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவியுள்ளது என்றார். இது குறித்து அரசாங்கம் இன்று மௌனம் காப்பதாகத் தெரிவித்த அவர், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 56,422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதால் நாட்டின் பல மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளன எனக் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டும் என சுகாதார துறையினர் எச்சரிக்கும் சூழலில், இந்த தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையானதொரு வேலைத்திட்டம் இல்லை என்றும் சாடினார். எனவே, டெங்கு ஒழிப்பை விரைவுபடுத்தி மக்களைப் பாதுகாப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை வகுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகள் வெற்றிடங்களை நிரப்புவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்விரு நீதிமன்றங்களிலும் பல வெற்றிடங்கள் காணப்படுவதுடன், அவை ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால், தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளின் பணிச்சுமை அதிகரித்து வழக்கு விசாரணைகள் முடங்கி, கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
நீதித்துறையில் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டிய அவர், இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதால், அவர் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க முயல்வதில் சிக்கல் உள்ளதாகவும், கீழ் நீதிமன்றங்களில் உள்ள தகுதியான அதிகாரிகளை மேல் நீதிமன்றங்களுக்கு நியமிக்கும் பாரம்பரியத்தை அரசாங்கம் தற்போது மீறியுள்ளதால் இதற்குப் பின்னால் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அனைவருக்கும் சமமான சட்டம் நிலைநாட்டப்படும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர் என்பதால், பாரம்பரியங்களை உடைக்காமல், பதவிக் காலத்தை நீடிக்க முனையாது, தகுதியான நீதிபதிகளை உடனடியாக நியமித்து மக்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி மகிழ்ச்சியடைகிறது என்றார். ஆனால், இந்த நிலைமை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மட்டுமே சாத்தியமானது எனக் காட்ட அரசாங்கம் கடும் முயற்சி எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையில், 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் இலங்கை நடுத்தர வருமான நாடாக உலக வங்கியினால் அறிவிக்கப்பட்டது என்பதை நினைவூட்டினார்.
இலங்கை நடுத்தர வருமான நாடாக மாறினாலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என்றும், மக்களுக்கு வருமானம் இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் கூறினார். இதற்கு முன்னர், இலங்கை மக்கள் ஒருவேளை உணவை மட்டுமே உண்பதாக உலக வங்கி குறிப்பிட்டிருந்த அறிக்கைக்குப் பின்னரே தற்போது நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் வருமானம் வளரவில்லை, மாறாக செலவுகள் அதிகரித்துள்ளன என்றார். ஏழை மக்களின் வருமானம் உயரவில்லை என்பதோடு, அவர்களால் அத்தியாவசிய உணவுகளையோ, மருந்துகளையோ வாங்க முடிவதில்லை என்பதால், இந்த அறிவிப்பின் பலனை நாட்டின் சாதாரண மக்கள் அனுபவிக்கவில்லை என்றும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாத காலப்பகுதியில் கிடைத்துள்ள ஒரே சாதகமான செய்தி இதுமட்டும்தான் என்றும் தெரிவித்தார். 2018 ஐ விட பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால், இந்த மாற்றம் பணக்காரர்களுக்கு சாதகமானதே தவிர, ஏழை மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எரிபொருள் விலையை பெருமளவில் அதிகரித்துவிட்டு, பின்னர் சொற்ப தொகையால் குறைத்து அரசாங்கம் பெருமை பேசுகிறது என்றும், இந்த சொற்ப விலை குறைப்பின் பலன் மக்களுக்குச் சென்றடையவில்லை மாறாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் விலையை உயர்த்தி அரசாங்கம் பெரும் இலாபம் ஈட்டியதுடன், கறுப்புச் சந்தை முதலாளியைப் போல நுகர்வோரை சுரண்டியது என்றார். மக்களை வதைத்து வரி வசூலித்து, திறைசேரியை நிரப்பியுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், ஏழை உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த பணத்தைக் கொண்டு தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம், அல்லது எரிபொருள் வரியைக் குறைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் விலைகளைக் குறைத்திருக்கலாம், ஆனால் அரசாங்கம் அதைச் செய்யவில்லை என்றார். மாறாக, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும் என மக்களை மேலும் சுரண்டத் தொடங்கியுள்ளனர் என அவர் கவலை வெளியிட்டார்.
விவசாயிகளின் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு நியாயமான விலையைக் கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், போராடும் விவசாயிகளை அரசாங்கத்தின் அமைச்சர்கள் அவமதிப்பதற்கும் இகழ்வதற்கும் முற்படுவதாகவும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு 120 ரூபா சான்றிதழ் விலை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்த போதிலும் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, அரசாங்கத்தின் நெற்களஞ்சியசாலைகள் நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். கடந்த போகத்தில் பெருமளவான அரச நிதியைச் செலவழித்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனத் தெரிவித்த அவர், அந்த நெல்லைக் களஞ்சியங்களில் வைத்துக்கொண்டே, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டார். இதனால் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய உள்நாட்டு விவசாயிகளின் நெல் இன்னும் களஞ்சியங்களில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவித்த அவர், இந்நிலைமையில் இந்த போகத்தின் நெல்லை அரசாங்கம் எவ்வாறு கொள்வனவு செய்யப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளனவே தவிர, முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

