ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடிக்கு சமரசமே தீர்வு: தயாசிறி ஜயசேகர எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்கொண்டுள்ள தற்போதைய சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சமரசத்திற்கு வருவதே ஒரே தீர்வு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேன்முறையீடு இன்று கொழும்பு சிவில் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு சட்டவிரோதமானது என நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்துடன் தற்போது கட்சியில் நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவிகள் மற்றும் அவர்களால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சட்டரீதியாக செல்லுபடியற்றவை என்றும் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முற்றிலும் செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டு, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத ஒரு கட்சி போன்ற நிலையை அடைந்துள்ளதாக கவலை வெளியிட்ட தயாசிறி ஜயசேகர, தற்போதைய நிர்வாகத்தினரால் எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் சட்டரீதியாக ஈடுபட முடியாத சூழல் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நீதிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து மூன்று வருடங்களாக தாம் இந்த நீண்ட சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் தமக்கு நியாயமான இறுதித் தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கட்சியின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, இந்த நெருக்கடிக்கு சுமுகமான தீர்வைக் காண தாம் எப்போதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தினார்.

