அப்புத்தளையில் திடீர் பனிமூட்டம் – வாகன ஓட்டிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அப்புத்தளை நகரம் மற்றும் அப்புத்தளை – பண்டாரவளை வீதி, வெளிமடை வீதி, அப்புத்தளை – பெரகல வீதிகளில் திடீரென அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகக் காணப்படாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நகரப் பகுதிகளில் அமைந்துள்ள பாதசாரிகள் கடவைகளும் தென்படாத சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், பாதசாரிகளும் சாலைகளைக் கடக்கும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைவரும் அவதானத்துடன் செயல்படுமாறு பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

