மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்; புலம்பெயர் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் சுரேன் ராகவன்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் பறிக்கப்பட்டு வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன்,
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான டில்வின் சில்வா ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்நேரத்தில் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தாம் அடுத்தகட்டப் போராட்டங்களில் இறங்குவதற்கு முன்பதாக, எம்மால் கொடுக்கக்கூடிய அனைத்து அரசியல் அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, வரும் 30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்பதே தற்போதைய எமது பலமான கோரிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து தனது கடுமையான கண்டனத்தையும் கேள்விகளையும் சுரேன் ராகவன் முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, தற்போதைய அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், விடுதலைப் புலிகளுக்குச் சார்பான அமைப்புகளிடமிருந்தும் நேரடியாகப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், லண்டனில் இவ்வாறான பணத்தைப் பெற முயன்ற போதே அங்குள்ள அமைப்புகள் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரமானது பாரதூரமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் டில்வின் சில்வா ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமன்றி, வெளியில் வந்து மக்களுக்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சவால் விடுத்துள்ளார்.
பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இயக்கங்களிடமிருந்தோ அரசாங்கம் எந்தவித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை அவர்கள் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அரசாங்கத்தால் அதனை நிரூபித்துக் காட்ட முடியாவிட்டால், இக்குற்றச்சாட்டை பகிரங்கமாகச் சுமத்திய குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

