குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நயினை அம்மன் சிலை – ஏனைய மதங்களும் வேண்டும் என NPP வலியுறுத்து – சபை அமர்வில் பெரும் குழப்பம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI


புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில் வேலணையின் அடையாளங்களுள் ஒன்றான நயினாதீவு நாகபூசனி அம்மனின் சிலை வைக்கப்பட வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட முன்மொழிவுக்கு மாற்றாக NPP உறுப்பினர்கள் முன்வைத்த பொது அடையாளம் வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தால் வேலணை பிரதேச அமர்வில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமாரனால் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த விடையம் தொடர்பில் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை சபையில் முன்வைத்து உரையாற்றும் போது –

மீள் கட்டுமாணம் செய்யப்பட்டுள்ள புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த சுற்றுவட்டத்தில் தீவகத்தின் அடையாளமான அன்னை நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மனின் சிலை வைக்கப்படவேண்டும் என்பதே அனேகரின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் குறித்த விவாதத்தின் போது சபையில் பிரசன்னமாகியிருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நயினாதீவு என்பது ஒரு சுற்றுலா தளம். இன்கு ஓர் மதத்தின் அடையாளத்தை காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது.
குறிப்பாக நயினாதீவில் நான்கு மதங்கள் சார் மக்கள் வாழ்கின்றனர்.

எனவே அங்கு நாங்கு மதங்களின் அடையாளங்கள் அல்லது பொதுவான தீவகத்தின் அடையாளம் ஒன்று வைப்பதே நல்லது என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சபையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சிகளின் சார் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனாலும் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நாகபூசனி அம்மனின் சிலையே வைக்கப்பட வேண்டும் என்ற எடுத்த நிலைப்பாட்டால் அது தீர்மானமாக வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து விரைவில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என தவிசாளர் அசோக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.