ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கைத் திரைத்துறையின் அசாத்தியப் படைப்பான ‘கூத்தாடி’ திரைப்படம், சர்வதேச எல்லையைத் தாண்டி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கட்டிப்போட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமரின் அமைச்சரவைச் செயலாளரும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உதவி அமைச்சருமான மாண்புமிகு Dr. ஆண்ட்ரூ சார்ல்டன் (Hon Dr Andrew Charlton MP – Member for Parramatta, Australian Labour Party) அவர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்து, படக்குழுவினரை மனதாரப் பாராட்டி கௌரவித்துள்ளார்.
ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியின் முக்கியப் புள்ளியாக விளங்கும் அமைச்சர் Dr. ஆண்ட்ரூ சார்ல்டன், கலை மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர். அந்த வகையில், தயாரிப்பாளர் செல்வின் தாஸ் அவர்களின் அசாத்திய தயாரிப்பில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான ‘கூத்தாடி’ திரைப்படத்தை அவர் பிரத்யேகமாகப் பார்வையிட்டார்.
திரைப்படம் நிறைவடைந்ததும், படத்தின் ஆழமான திரைக்கதை, தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் கலைஞர்களின் உழைப்பைக் கண்டு வியந்த அமைச்சர், தயாரிப்பாளர் செல்வின் தாஸ் மற்றும் படக்குழுவினருக்குத் தனது உயரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கௌரவித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சரின் பாராட்டைப் பெற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ‘கூத்தாடி’ திரைப்படம், எதிர்வரும் 19ம் திகதி இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
உலகத் தலைவர்களையே வியக்க வைத்துள்ள இத்திரைப்படத்தைக் திரையரங்குகளில் காண்பதற்கு இலங்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் குதூகலமும் ஏற்பட்டுள்ளது.
“இலங்கைத் திரைத்துறையின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள ஒரு காவியம்” எனப் பார்க்கும் அனைவராலும் ‘கூத்தாடி’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சர்வதேச அரசியல் தலைவர், அதுவும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், இந்த இலங்கைத் திரைப்படத்தைத் தேடிப் பார்த்துப் பாராட்டியிருப்பது ஒட்டுமொத்த இலங்கைத் திரைத்துறைக்கே கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.
தயாரிப்பாளர் செல்வின் தாஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான இந்த முயற்சிக்கு, உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களிடம் இருந்தும், ஊடகங்களிடம் இருந்தும் தற்பொழுது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



