தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ விமர்சனம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர் நேற்றைய தினம் மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர், நாடாளுமன்றத்திற்கு தகுதியான மலர்க்கன்றுகள் போன்ற புத்திஜீவிகளை அனுப்புமாறு கோரியிருந்த போதிலும், தற்போதைய நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பியிருப்பது களைப்பயிர்களை போன்றவர்களைத் தான் என அவர்கள் இப்போது விமர்சிப்பது மக்களை அடியோடு ஏமாற்றும் ஒரு செயலாகும் என்று அவர் சாடினார்.
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த அவர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அரிசி இறக்குமதி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு முறையான விலையோ அல்லது சந்தை வாய்ப்போ இல்லை எனவும், அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தந்திரோபாயமாக அரிசி கிலோ ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சோளம், முட்டை போன்றவற்றுடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உப்பு கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முற்காலத்தில் வீட்டில் என்ன தட்டுப்பாடு இருந்தாலும், உப்புக்கும் தேங்காய்க்கும் தட்டுப்பாடு வரக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் என நினைவுகூர்ந்த முன்னாள் அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமையலறையில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ உப்பின் விலை 300 முதல் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருந்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
அத்துடன், கடந்த நல்லாட்சி அரசாங்கம் வீழ்வதற்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் சில மாதங்களும் கடந்துள்ள நிலையிலும், மாகாண சபை அல்லது எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு அச்சப்பட்டு, அது குறித்துப் பேசுவதைக் கூட தவிர்த்து வருவதாகக் கூறினார். திறமையற்ற மற்றும் அனுபவமற்ற ஒரு குழுவினரிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நாடு விநாசத்தை நோக்கிச் செல்வதையே தற்போதைய நிலவரங்கள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

