அரசாங்கம் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்ததுடன், மக்களின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது: நாமல் ராஜபக்ச சாடல்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கம், பதவியில் இருக்கும் போதும் தொடர்ந்து பொய்களையே கூறி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், நேற்றிரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இக்கருத்துக்களை முன்வைத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வெடிகுண்டுதாரிகள், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தேசியப் பட்டியலிலேயே இருந்தார்களே தவிர, பொதுஜன பெரமுனவில் அல்ல என்று சுட்டிக்காட்டினார்.

இந்த பயங்கரவாதிகளுக்காக நீதிமன்றத்தில் முன்னின்ற சட்டத்தரணிகள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும் எனக் குறிப்பிட்ட அவர், அன்று இந்த விசாரணை கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு இன்று அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக சாடினார். அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், அதற்காக ஜே.வி.பி-யின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களே வேலை செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க மக்கள் மத்தியில் தொடர்ந்து பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும், குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச மேலும் விவரித்தார்.

நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லுக்குரிய நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதுடன், அரசாங்கம் உறுதியளித்தபடி உர மானியத்தையோ அல்லது உரிய நேரத்தில் உரத்தையோ வழங்கவில்லை என்றும், சிறுபோகத்திற்கான உரமும் இன்றி, பெரும்போகத்திற்கான முறையான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், வங்கிக் கடன்களைப் பெற்று நெல் கொள்வனவு செய்த சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது அரிசியை விற்க முடியாமல் ஆலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு முறையான விலை கிடைக்காததால் அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மீனவ சமூகமும் இன்று பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் மற்றும் அண்மைய நிதி விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், ‘Rebuild Sri Lanka’ என்ற பெயரில் நிதி ஒன்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், நாடாளுமன்ற நிதிக் குழுவின் செயலாளர் அவ்வாறானதொரு நிதியம் உருவாக்கப்படவே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவ்வாறாயின் அந்த நிதிக்காகச் சேர்ந்த பணம் எங்கே போனது என்ற கேள்வி எழுவதாகக் கூறிய அவர், அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து தவறான கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றப்படும் போதெல்லாம், யாரோ ‘ஹேக்’ (Hack) செய்துவிட்டார்கள் அல்லது தொழில்நுட்பத் தவறு என்று அரசாங்கம் சாக்குப்போக்குக் கூறுவதாகக் சாடினார்.

சாதாரண கிராமத்து மனிதன் தனது கணக்கில் சிறிய தொகையொன்றை வைப்புச் செய்தால், வரி கோப்புகள் மற்றும் ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்கும் அரசாங்கம், அதிகாரிகளுடனும் பெரிய தொழிலதிபர்களுடனும் தொடர்புடைய தவறான கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் செல்லும் போது எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

இறுதியாக, நாட்டின் வேலைவாய்ப்புப் பிரச்சினை மற்றும் முதலீட்டாளர் வெளியேற்றம் குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ச, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அவர்களுக்குத் தனியார் துறையிலாவது ஒரு சாதாரண வேலையைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒருபுறமிருக்க, நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளும் நாளாந்தம் மூடப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருவதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இருக்கும் வேலைகளையாவது பாதுகாத்துக் கொள்ள முடியாத பலவீனமான நிலையிலேயே இந்த அரசாங்கம் உள்ளதாக நாமல் ராஜபக்ச தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார்.