சங்கீத்சன் கைது முதல் மாகாண சபைத் தேர்தல் வரை: ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாணக்கியன் சந்திப்பு
Meiveli Media Team

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியை பிரஸ்ஸலில் சந்தித்து முக்கிய அரசியல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் அதன் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சாணக்கியன் கடுமையான கவலையை வெளியிட்டார். இந்தக் கைது; கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். மேலும், சங்கீத்சனின் கைது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அனுப்பிய கடிதத்தையும் சாள்ஸ் வைட்லியிடம் கையளித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கங்கள் பலமுறை உறுதியளித்த போதிலும், அது தொடர்ந்தும் குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமைக் கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதனுடன், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய அவசியம், அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் உண்மை கண்டறியும் செயல்முறைகளின் அவசியத்தையும் சாணக்கியன் வலியுறுத்தியதுடன், தமிழ் பகுதிகளில் தொடரும் காணி ஆக்கிரமிப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்து, காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ் மக்களின் அரசியல், மனித உரிமை மற்றும் சமூக நீதி தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

