சுரேஷ் சலேவிற்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் 3வது நாளாகவும் தொடர்ச்சி: பொதுமக்களின் எதிர்ப்பால் கொழும்பு கோட்டையில் பரபரப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றைய தினம் (10) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டியே அவரது ஆதரவாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்ப நாட்களை விடவும் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, மிகக் குறைந்த அளவிலான ஆதரவாளர்களே இதில் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்ததுடன், “முன்னாள் புலனாய்வுப் பிரதானிக்கு இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மிகச் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
இதேவேளை, இப்போராட்டம் இடம்பெற்ற பகுதியில் நேற்றைய தினம் பெரும் பரபரப்பான சூழல் ஒன்று நிலவியது. ரயில் நிலையத்தைப் பயன்படுத்திய மற்றும் வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர், போராட்டக்காரர்களை நோக்கிப் பகிரங்கமாகவே காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். ஈஸ்டர் தாக்குதலில் உயிர்கள் பலியாகக் காரணமான சம்பவங்கள் குறித்துப் பாரபட்சமற்ற விசாரணைகள் நடக்கும் போது, அதற்குத் தடையாகப் போராட்டம் நடத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்து பொதுமக்கள் சிலர் அங்கிருந்த போராட்டக்காரர்களுடன் கடுமையான வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, அண்மையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணியில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


