காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

Meiveli Media Team

டெல்லியில் எதிர்வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் நிலையில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை எனதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு இழைத்த அரசியல் துரோகத்தால் கட்சித் தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு,  ஒரே நாடு – ஒரே தேர்தல், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், வக்பு சட்டம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான பல்வேறு விடயங்களில் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன் முக்கிய சக்தியாக திமுக செயல்பட்டு வந்ததாகவும், அதன் தலைவர் மு க ஸ்ராலின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் எழுப்பியதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ், தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியான தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மக்கள் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் திமுக தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தேசிய அரசியலில் காங்கிரஸ் – திமுக உறவின் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.