ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கந்தளாயில்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிநாட்டு விவகார பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கந்தளாய் பிரதேச செயலகத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் காட்டு யானைகளின் ஊடுருவலால் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

வாழ்வாதார பாதிப்பும் பாதுகாப்பு அச்சுறுத்தலும்
இக்கூட்டத்தின் போது மக்கள் பிரதிநிதிகளால் பல முக்கிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன:

கந்தளாய் பேராறு பகுதியில், மாரிகாலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் காட்டு யானைகளால் தொடர்ச்சியாக நாசமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக பாடசாலை வளாகங்களுக்குள் காட்டு யானைகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, அவர்களின் கல்விச் செயல்பாடுகளையும் பெரிதும் பாதிப்பதாக கவலை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு, இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர், பாதுகாப்புப் படையினர், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பிரதி அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.