அரசாங்கத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, தகுதியுடைய 542 வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு நிரோஷன் பாதுக்க வலியுறுத்தல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பல பில்லியன் ரூபாய் முறைகேடுகள், அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள (02) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறியைக் கொள்வனவு செய்த விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திதான் முதன்முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது என்றும், பெப்ரவரி மாதம் முதல் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று தங்கள் தரப்பு ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், சோமதாச பலிஹவடன, முதன்மை நிறைவேற்று அதிகாரி நலின் சுபசிங்க மற்றும் ஸ்ரீயானி குலசிங்க ஆகிய மூவரும் இணைந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்கள் வைப்புச் செய்த பணத்தைப் பயன்படுத்தி இந்த 6 பில்லியன் ரூபாய் முதலீட்டை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நிகர நட்டம் 536 மில்லியன் ரூபாயாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நட்டத்திற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், ராஜபக்சாக்களுடன் இருந்த ஊழல் கும்பல் இப்போது ஜனாதிபதி அநுரவைச் சுற்றி வலம் வந்துகொண்டு இந்த ஏமாற்று வேலைகளைச் செய்வதால் நாடு மேலும் வங்குரோத்து நிலையை நோக்கியே செல்லும் என்றும் எச்சரித்தார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியினுள் இயங்கும் ‘நிழல் அமைச்சரவை’ மூலம் அரசாங்கத்தின் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிரோஷன் பாதுக்க, கொள்கலன் மோசடி, திறைசேரி மோசடி, நிலக்கரி இறக்குமதி மோசடி மற்றும் வாகன இறக்குமதி மோசடி உள்ளிட்ட பல ஊழல்களை இந்த நிழல் அமைச்சரவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவர்களால் திரட்டப்படும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணி தொடர்ந்து மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்த தகவல்கள் தமக்கு தினசரி கிடைத்து வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாசவின் மகன் இல்லை என வெளியிட்ட கருத்துக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். சஜித் பிரேமதாச, ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது இந்த நாட்டிற்கே தெரிந்த விடயம் என்றும், அதை அறியாதவர் திஸ்ஸ குட்டியாரச்சி மட்டுமே என்பதால் இது பொதுஜன பெரமுனவின் அரசியல் வங்குரோத்து நிலையை காட்டுவதாகவும் சாடினார். நாமல் ராஜபக்ச ஏன் இவ்வாறான தரம் தாழ்ந்த அரசியல்வாிகளைத் தன் அருகில் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது எனக் குறிப்பிட்ட அவர், இவர்களை வைத்துக் கொண்டு நாமலால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என்றும், நாமல் தனது அரசியல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப விரும்பினால், புத்திசாலிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், நாட்டை அநாதரவாக்கிய ஒரு குடும்பத்திற்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இல்லை என்றும் கூறினார்.
அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து ஊழல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியே அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்த அவர், வாகன இறக்குமதிக்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கூடுதல் வரி விதிப்பு வர்த்தமானி, ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதன் பின்னரே திருத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் 10,000 மில்லியன் ரூபாய் கூட்டிணைந்த வியாபாரிகளின் கைக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்றும், ‘அட்டோ 3’ (Atto 3) வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு வரி வருமானம் இழக்கப்படுவதையும் ஐக்கிய மக்கள் சக்தியே தடுத்து நிறுத்தியது என்றும் கூறினார். காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியவற்றின் ஊழல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியே வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் முதன்மைத் தகவல் தொடர்பு நிறுவனத்தை வங்குரோத்தாக்க அரசாங்கத்தின் சில தரப்பினர் முயல்வதாகவும், ஊழல்வாதிகளான ராஜபக்சாக்களை தோற்கடிக்க அநுர குமாரவின் அரசாங்கத்தால் முடிந்த போதிலும், அனுபவமும் முதிர்ச்சியும் இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டை ஒப்படைத்தமை குறித்து மக்கள் இப்போது கவலைப்படுகிறார்கள் என்றும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்று தகைமைகளைப் பூர்த்தி செய்த 542 இலங்கை மருத்துவர்களை உள்நாட்டு மருத்துவ சேவையில் இணைத்துக் கொள்வதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதாக நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டினார். இது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், சுகாதார அமைச்சின் அமைச்சரோ அல்லது செயலாளரோ அதற்கு மதிப்பளித்துச் செயற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அந்த மருத்துவர்களை உடனடியாகச் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

