சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் அரசாங்கம் மக்களைத் தள்ளுகிறது: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையிலும், உள்நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும், தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் உலக யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேலாண்மை செய்து, மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க முந்தைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போதைய சூழலில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் படிப்படியாகக் குறைந்து வரும் போதிலும், இலங்கையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் நேரடித் தாக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து, சாதாரண குடும்பங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசப் பிரச்சினைகளுக்கு அப்பால், தற்போதைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் உள்நாட்டில் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக, சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டர் காரணமாகத் திட்டமிட்டபடி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாகக் கூறினார். இதன் விளைவாக, தினசரி 8 இலட்சம் லீற்றர் டீசலையும், மாதத்திற்கு மேலதிகமாக 24 இலட்சம் லீற்றர் டீசலையும் எரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். மக்களின் பணத்தைக் கொண்டு திறைசேரியை நிரப்பிவிட்டு, அதில் ஒரு டிரில்லியன் ரூபா பணம் இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், அதனை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மறைமுக வரிகள், மின்சாரம், நீர், இணையக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்தே திறைசேரி நிரப்பப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும் கடைசிச் சந்தர்ப்பம் இதுவெனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 2040 ஆம் ஆண்டு வரை கடனைச் செலுத்தும் திட்டங்களைத் தயாரித்து, மீண்டும் நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் நாட்டைத் தள்ளுவதாகவும், இதன் மூலம் இன்னும் பிறக்காத குழந்தைகளையும் கடனாளிகளாக்கும் செயலை இந்த அரசாங்கம் செய்து வருவதாகவும் டொக்டர் சமல் சஞ்ஜீவ குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் இதுவரை சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால் வெளிநாட்டுப் பிரேஷணங்கள் அதிகரித்திருந்தாலும், அது பெருமைப்படக்கூடிய விடயமல்ல என்றும், உள்நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, இலங்கை மக்களை வெளிநாடுகளின் கைப்பாவைகளாக மாற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் கூறினார்.

அதேபோல், பெண்கள் பயன்படுத்தும் சுகாதாரத் துண்டுகளுக்கு (Sanitary Towels) அதிகளவிலான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஆசியாவிலேயே சுகாதாரத் துண்டுகளுக்கு அதிக விலை செலுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்திலுள்ள பெண் அரசியல்வாதிகள் கூட இது குறித்துப் பேசுவதில்லை என்றும் அவர் சாடினார். எனவே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பொருளாதாரத் திட்டத்தை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோருவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்காக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சியை வழங்கவில்லை என்பதை நினைவுறுத்தினார்.

முறையான கட்டமைப்பு மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தார்களே தவிர, 76 வருட சாபத்திற்கு மேலும் 5 வருடங்களைக் கூட்ட அல்ல என்றும், ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்துக் கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும், எனினும் நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என்றும் டொக்டர் சமல் சஞ்ஜீவ மேலும் தெரிவித்தார்