அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

Meiveli Media Team

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க, அதில் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, அவுஸ்திரேலியாவில் வாழும் நமது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தாம் மிகவும் நெருக்கமாகக் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தினால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தீர்மானங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, அந்த நம்பிக்கைக்கு எவ்விதத்திலும் பங்கம் விளைவிக்காத வகையில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.

ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டிருந்தனர். தாய்நாட்டின் புதிய பயணத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உண்மையான ஆர்வம், மிகுந்த தைரியத்தையும் பலத்தையும் அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த விஜயத்தின் போது மேலும் சில உத்தியோகபூர்வ சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், வரும் நாட்களில் ஏனைய நகரங்களில் வாழும் இலங்கை மக்களையும் சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மெல்போர்ன் கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள், வருகை தந்திருந்த மக்கள் மற்றும் மண்டப இடவசதி பற்றாக்குறை காரணமாகக் கலந்துகொள்ள முடியாமல் போன அனைவருக்கும் நன்றியையும் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்