பாட்டாலி சம்பிக ரணவகவின் மனித நேயம்: வீதியில் விபத்துக்குள்ளான இளைஞனை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சர்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வெசாக் பௌர்ணமி தினமான நேற்று, ரிதிகம – குருணாகல் வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றுக்குள்ளான தம்பதியினரில், இளைஞர் ஒருவர் வீதியோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது, அந்த வீதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக, உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தி, காயமடைந்தவர்களை மீட்க முன்வந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர், உடனடியாகத் தனது வாகனத்திலிருந்து இறங்கி, ஆபத்தான நிலையிலிருந்த இளைஞனைத் தனது உத்தியோகபூர்வ வாகனத்திலேயே ஏற்றி, மிக விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

அவசர விபத்துக்களின் போது பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவகவின் இந்த உடனடி மனிதாபிமானச் செயல் அங்கிருந்த பொதுமக்களின் பலத்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.