நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவதூறு பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் என அறிவிப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தன் மீதான அவதூறான குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், தனக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் மறுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான சில ஊடகங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட நபர்களும் இந்த பொய்யான தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை என்றும் சாடினார்.
தன்னுடைய அரசியல் பயணம் திறந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் முதற்கொண்டே வீதியில் இறங்கி போராடி உருவானதாகும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் நடக்கும் அநீதிகள், இனவாதம் மற்றும் ஊழல்களுக்கு எதிராகவே தனது அரசியல் வரலாறு எழுதப்பட்டுள்ளது என்றார். மேலும், எந்தவொரு போதைப்பொருள் வியாபாரிகளின், சமூக விரோத சக்திகளின் ஆசீர்வாதத்துடனோ அல்லது கள்ள வியாபாரிகளின் உதவியுடனோ தான் அரசியல் செய்ய வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பழிவாங்கப் பார்த்த கலாச்சாரமே தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திலும் தொடர்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் பல தரப்பிலிருந்தும் தனக்கு தொலைபேசி அழைப்புகள் வருவது இயல்பானது என்றும், சிறையிலிருந்து தனக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும் தெளிவுபடுத்திய அவர், வெறும் தொலைபேசி அழைப்புகளை மாத்திரம் வைத்துக் கொண்டு குற்றச்சாட்டுகளை ஜோடிப்பது அநாகரிகமானது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த இப்ராஹிம் ஹாஜியார் என்பவருடன் தனக்கு பழக்கம் இருந்ததை ஏற்றுக்கொண்டதுடன், அவரது பிள்ளைகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை நினைவு கூர்ந்தார். அதற்காக மக்கள் விடுதலை முன்னணி கட்சியையோ அல்லது அநுர குமார திஸாநாயக்கவையோ தாம் அந்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமான அரசியல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது அரசாங்கத் தரப்பினர் தன் மீது இத்தகைய கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதாகக் கூறினார்.
இறுதியாக, தவறான செய்திகளைப் பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், இத்தகைய அச்சுறுத்தல்களினால் தனது வாயை மூடிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஊழல், அநீதி மற்றும் இனவாதத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் நின்று தனது அரசியல் பணியை எதிர்காலத்திலும் துணிச்சலுடன் தொடரப் போவதாக அவர் தனது உரையில் உறுதியளித்தார்.

