தொம்பே பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மல்வானை சர்ச்சைக்கரிய காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க பிரதமர் உடன்பாடு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தொம்பே பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட மல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்கரிய காணி மற்றும் சொகுசு வீட்டை, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைப்பதற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் இன்று (18) காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சசிந்து பெரேரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
> “குறித்த சொத்துக்களை மாணவர் சமூகத்தினதும், உயர் கல்வித்துறையினதும் நலன்களுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கத்தின் தரப்பில் இருந்து விரைவான மற்றும் சாதகமான பதில் கிடைத்துள்ளது. பிரதமரினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குறுதி மற்றும் உடன்பாட்டின் அடிப்படையில், மல்வானை வீட்டு வளாகத்திற்குள் தங்கியிருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களையும், அதனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளையும் கைவிட்டு, இப்பொழுதே அந்த வளாகத்தில் இருந்து முழுமையாக வெளியேற நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.”
>
இவ்வுடன்பாட்டைத் தொடர்ந்து, மல்வானை சொத்து விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை தற்போது தணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.