பசில் ராஜபக்ஷவினுடைய சொத்தை பொது உடமையாக்குமாறு கோரி போராட்டம்

Meiveli Media Team

உரிமையாளர் இல்லாததாகக் கருதப்படும் மல்வானை பிரதேசத்திலுள்ள சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள காணி மற்றும் வீடு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியுள்ளது.மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் என்ற அரசாங்க வாக்குறுதியை நினைவூட்டியே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நிலத்தை பல்கலைக்கழகங்களின் இடவசதி தேவைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவ்விடயம்  முன்பு நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், இது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என கூறப்பட்டிருந்தாலும், அவர் அதனை மறுத்திருந்தார். பின்னர் நீதிமன்றம் குறித்த சொத்தினை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தது.‘அரகலய’ போராட்ட காலத்தில் இந்த வீட்டில் ஏற்பட்ட சேதத்திற்குப் பின்னர், இந்நிலத்தில் சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.