அஸர்பைஜானிலிருந்து அழைத்துவரப்பட்ட படுவத்தே சாமர 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை

Meiveli Media Team

அஸர்பைஜானில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருமான ‘படுவத்தே சாமர’ என அழைக்கப்படும் மனோஜ் சுரங்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அவரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் அஸர்பைஜான் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 7ஆம் திகதி அஸர்பைஜான் சென்றிருந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு, இந்தியா வழியாக சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் வந்தடைந்தபோது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ராகம, படுவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதான மனோஜ் சுரங்க, நீண்டகாலமாக டுபாயிலும் பின்னர் அஸர்பைஜானிலும் தலைமறைவாக இருந்துள்ளார். பாதாள உலக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியிருந்த அவர், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.2020ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தலை டுபாயில் இருந்தபடியே வழிநடத்தியதாகவும், கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவராகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளுடன் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது அவரிடம் இருந்து மேலதிக தகவல்களை பெற தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.