இரகசியமாக வெளிநாட்டுக்கு போகும் மதுபானங்கள்.50 வருடத்திற்குப் பின்னர் பாகிஸ்தானில் நடந்த மாற்றம்!
Meiveli Media Team

பாகிஸ்தானில் சுமார் 50 ஆண்டுகளாக மதுபானம் அருந்த தடை நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பழமையான மதுபான உற்பத்தி நிறுவனமான ‘முர்ரி புரூவரி’(Murree Brewery) மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 1977-ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்த தடையால் உள்நாட்டில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது இங்கிலாந்து, ஜப்பான், போர்த்துக்கல் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குத் தனது மதுபானங்களை அனுப்பியுள்ளது.1860-களில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் ஏற்றுமதிக்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற்றது.பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மதுபான ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே பழச்சாறுகள் மற்றும் மென்பானங்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வரும் இந்த நிறுவனம், இனி சர்வதேச சந்தையில் தனது மதுபானங்களை தடையின்றி விநியோகம் செய்ய பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. சீன நிறுவனங்களுக்கு மதுபானம் தயாரிக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே, இந்த நிறுவனமும் தங்களுக்கு ஏற்றுமதி உரிமம் வேண்டும் என்று போராடிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

