கந்தளாய் பேராறு அம்மன் கோவில் வீதி புனரமைப்பில் சர்ச்சை: காபட் வீதி கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய் பேராறு இரண்டு, அம்மன் கோவில் வீதியை புனரமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதி மக்கள் பாரிய கண்டன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த இந்த வீதியை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ‘காபட்’ (Carpet) வீதியாக மாற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பியே மக்கள் இம்முறை அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், தற்போது குறித்த வீதியை காபட் செய்வதற்குப் பதிலாக ‘கொங்கிரீட்’ (Concrete) வீதியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், “எங்களுக்கு கொங்கிரீட் வீதி வேண்டாம், வாக்குறுதி அளித்தபடி காபட் வீதியே வேண்டும்” என வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், குறித்த பகுதிக்கு வருகை தரவிருந்த ஆளுநர், மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த இடத்திற்கு வராமலேயே திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கந்தளாய் பிரதேச சபை அதிகாரிகள் தெரிவிக்கையில், மேல் இடத்திலிருந்து அவசர அழைப்பு வந்த காரணத்தினால் ஆளுநர் அவசரமாக திரும்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.
மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து, இன்று ஆரம்பிக்கப்படவிருந்த வீதி புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அப்பகுதி மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

