கொச்சிக்கடை ஸ்ரீ இலங்கமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு மாநகரின் ஆன்மீக மையங்களில் ஒன்றான கொச்சிக்கடை, இரத்தினம் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இலங்கமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் (01.05.2026) பக்தி பூர்வமாக நடைபெற்றது. மங்களகரமான பராபவ வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், சித்ரா பௌர்ணமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் இந்த மஹா கும்பாபிஷேகம் அம்பிகையின் திருவருளுடன் நிறைவேற்றப்பட்டது.

நேற்று அதிகாலை 05.00 மணி முதல் விநாயகர் வழிபாடு மற்றும் புண்ணியாகவாசனத்துடன் இறுதி நாள் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து யாகபூஜை, அக்னி வழிபாடு, மகாபூர்ணாகுதி மற்றும் திராவிட ஸ்தோத்திர பாராயணங்கள் இடம்பெற்றன. காலை 08.20 மணியளவில் கும்ப வீதி பிரதட்சனம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து இராஜகோபுர கும்பாபிஷேகம், மூலமூர்த்தி தூபி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. காலை 10.25 மணி வரையிலான மீன லக்ன சுப வேளையில் ஸ்ரீ இலங்கமாகாளி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் 27-ம் திகதி திங்கட்கிழமை விநாயகர் வழிபாடு மற்றும் கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி ஐந்து நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. கிரியாகாலங்களின் போது கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் மற்றும் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவங்கள் ஆகம விதிகளுக்கமைய இடம்பெற்றன. கதிர்காம சுவாமி ஜோதிடம் ஈசான சிவ பிரம்மஸ்ரீ ஸ்ரீநிவாசக ஸ்ரீகாந்த சிவாச்சாரியார் தலைமையில், பெருமளவிலான சிவாச்சாரியார்கள் இந்த மகோற்சவத்தை முன்னின்று நடாத்தினர்.
சிற்பரத்தினம் சந்தனகுமார் குழுவினரால் ஆலயப் புனரமைப்புப் பணிகள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றைய கும்பாபிஷேக நிகழ்வில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்றைய மாலை வேளையில் சர்வபோதகம், சாயரட்சை மற்றும் வசந்த மண்டப பூஜைகளுடன் விழா இனிதே நிறைவுற்றது. அடியார்கள் அனைவரும் அம்பிகையின் அருளாசியையும் சௌபாக்கியங்களையும் பெற்றுய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

