போதைப்பொருட்களுடன் கைதான 22 பிக்குகள் விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் : அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு
Meiveli Media Team

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் செயற்படும் அதேவேளை, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார். தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சனிக்கிழமை இரவு 10.10 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் மூலம் வருகை தந்த தேரர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே, சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தேரரும் சுமார் 5 கிலோகிராம் போதைப்பொருளைத் தனித்தனியாகக் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சந்தை பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

