இந்தியாவை ‘நரகக் குழி என பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு இந்தியா கடும் கண்டனம்

Meiveli Media Team

மைக்கேல் சாவேஜ் என்பவரின் கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிர்ந்தது ‘அறிவற்றது மற்றும் தரம் தாழ்ந்தது’ என இந்திய வெளியுறவு அமைச்சு விமர்சித்துள்ளது. தெற்காசிய நாடான இந்தியாவை ‘நரகக் குழி’  என்று வர்ணிக்கும் ஒரு பதிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலையைத் தூண்டும் வகையில் டிரம்பின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.புதன்கிழமை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் 4 பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட உரையைப் பதிவிட்டார். இது பழமைவாத போட்காஸ்ட் தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜின் உரையின் எழுத்து வடிவம் எனக் கூறப்படுகிறது. அந்தப் பதிவில், அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் கிடைக்கும் குடியுரிமை உரிமையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தொழில்நுட்பத் துறையில் உள்ள இந்திய குடியேற்றவாசிகள், வெள்ளை இன அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்தியக் குடியேற்றவாசிகளுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றும் தவறாகக் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்ப் பகிர்ந்த அந்த உரையில், ‘இங்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு உடனடி குடியுரிமை கிடைக்கிறது. பின்னர் அவர்கள் சீனா, இந்தியா அல்லது கிரகத்தின் வேறு ஏதேனும் நரகக் குழியிலிருந்து முழு குடும்பத்தையும் அழைத்து வருகிறார்கள், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதற்குப் பதிலளிக்கையில், ‘இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்டவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை’ என்று கூறினார். மேலும், ‘இவை பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் நீண்டகாலமாகத் தொடரும் இந்தியா-அமெரிக்க உறவின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை’ என்றும் அவர் வலியுறுத்தினார்.