தீபச்செல்வன் புத்தகங்கள் தடுப்பு விவகாரம்: அரச இலக்கியத் துணைக்குழுவின் அனுமதி கிடைத்தால் நூல்கள் விடுவிக்கப்படும் : சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு

Meiveli Media Team

பிரபல தமிழ் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன் பிரதீபன் எழுதிய புத்தகங்களின் பிரதிகளை விடுவிப்பதற்கு, அரச இலக்கியத் துணைக்குழுவின் அனுமதி கட்டாயம் என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கியத் துணைக்குழுவின் அனுமதி கடிதம் கிடைத்த பின்னரே, சுங்கச் சட்டத்தின்படி அப்புத்தகங்களை விடுவிப்பதில் எவ்விதத் தடையுமில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா ‘லங்காதீப’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்களம் புத்தகங்களை மாத்திரமன்றி ஏனைய பொருட்களையும் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைப்பது சாதாரணமான ஒரு விடயம் என சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட பொருட்கள் அல்லது திரவியங்கள் தொடர்பில் உரிய ஒழுங்குமுறைப்படுத்தும் நிறுவனங்களின் அனுமதி கிடைத்த பின்னரே அவை விடுவிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். சில பொருட்கள் தொடர்பாகச் சுங்கத் திணைக்களத்திற்குச் சட்டரீதியான கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும், உதாரணமாக ஏதேனும் ஒரு புத்தகத்தின் உள்ளடக்கமானது பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாகவோ அல்லது ஏதேனும் ஒரு மதம் அல்லது மதத் தலைவருக்கு அவதூறு விளைவிப்பதாகவோ அமைந்தால்இ அப்புத்தகத்தைத் தடுத்துவைத்து இலக்கியத் துணைக்குழுவின் அனுமதியைப் பெறுவது சாதாரண நடைமுறை எனச் சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபச்செல்வன் பிரதீபன் எழுதிய நான்கு வெவ்வேறு புத்தகங்களின் 360 பிரதிகள் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி இலங்கைச் சுங்கத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டன. இது தொடர்பில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட ஆகியோரின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதன்போது, இந்தப் பிரச்சினையை மிக விரைவில் தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியத் துணைக்குழு என்பன இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும், அரச இலக்கியத் துணைக்குழுவிற்குள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அதன் உறுப்பினரான பிரபல எழுத்தாளர் மாலதி கல்பனா எம்ப்ரோஸ் தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.