முதல் சுற்று – புரட்சிக்குரல் 2026

புரட்சிக்குரல் 2026 - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

தமிழீழ தேசிய கானங்களை எங்களின் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட “புரட்சிக்குரல்” பாடல் போட்டியின் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் முதல் சுற்று கட‌‌ந்த ஞாயிற்றுக்கிழமை(19.04.2026) அன்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

தென்கிழக்கு இலண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர்கள், இளையோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கை “புரட்சிக்குரல் 2026” நிகழ்வின் பிரதான அனுசரணையாளரான “சாமி உணவக” உரிமையாளர் திரு கோபி, நிகழ்வின் ஒலியமைப்பாளர் திரு ஆனந்த், நடுவர்களான திரு பார்த்தீபன், திரு ஷான் மற்றும்
சங்கீத ஆசிரியர் திருமதி மேனகா சுரேஸ் ஆகியோர்
ஏற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியும் தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டன.

நிகழ்வின் முதல் நிகழ்வாக தமிழீழ மண்ணின் விடுதலைக்காக 30 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து தன்னுயிரை ஈகம் செய்த “அன்னை பூபதி” அம்மாவிற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழீழ போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த எம் உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து குட்டிக்கண்ணன் பிரிவினர் புரட்சிக்குரல் ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்ட ஐந்து பாடல்களில் ஒரு பாடலை தெரிவுசெய்து பாடினர். அவர்களுக்குரிய துடிப்புடன் ஒவ்வொரு பாடல்களையும் மிகவும் சிறப்பாக பாடினர், புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த எமது சிறார்கள்.

அடுத்ததாக மேஜர் சிட்டு பிரிவினர் தங்கள் வயது பிரிவினருக்கு கொடுக்கப்பட்ட பாடல்களை மிகவும் எழுச்சியுடன் பாடினர். அவர்களின் குரலில் எமது எழுச்சி கானங்கள் புதிய பரிணாமத்தை பெற்றன.

இறுதியாக மாமனிதர் சாந்தன் பிரிவினர் தாங்கள் கேட்டு வளர்ந்த பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடினர். ஒவ்வொரு சொல்லும் பார்வையாளர்களின் ஆழ் மனதில் பதிந்தன.

“புரட்சிக்குரல் 2026” இன் இறுதி சுற்று வருகின்ற மே மாதம் 2 திகதி Harrow leisure இல் நடைபெற உள்ளது. போட்டி நிகழ்விற்கு பலம் சேர்க்கும் விதமாக தமிழீழ இசையாளன் இசைப்பிரியனின் இசையில் தமிழீழ மற்றும் புலம்பெயர் தேசப் பாடகர்களின் எழுச்சி கானங்களும் இடம்பெற்றவுள்ளன. அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…