மன்னாரில் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள் ; மக்கள் கடும் எதிர்ப்பு

Meiveli Media Team

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள  சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும்  நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சமும் நிலவி வருகின்ற   நிலையில் மன்னார் நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நகர சபையின் தவிசாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள   சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும்  நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை நேற்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த தோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது. நீண்ட காலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளில் அருகிலேயே வீசி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,  இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைகின்றன.அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னார் பொலிஸார் மற்றும் நகரசபை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த மனிதநேயமற்ற மற்றும் சட்டவிரோத செயற் பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தின் அனுமதி பத்திரத்தை ரத்து செய்து, அதை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவிக்கையில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அந்த இடங்களை உடனடியாக சீல் வைத்து மூடவும் நான்  பொது சுகாதார அதிகாரிக்கு கட்டளையிட்டு இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.