உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்: நீதிக்காகக் குரல் கொடுத்த கர்தினால் ஆண்டகை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இன்று முற்பகல் வேளையில் திருத்தலத்தைச் சூழ விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் நிகழ்விற்கான ஆயத்தப் பணிகள் காலை முதலே முன்னெடுக்கப்பட்டன. காலை 8:40 மணியளவில் உத்தியோகபூர்வமாக நினைவேந்தல் ஆரம்பமானதுடன், அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வருகையைத் தொடர்ந்து முற்பகல் 8:45 மணிக்கு பிரதான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் கண்ணன் குருக்கள், மசூத் மௌலவி மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் விசேட உரைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய கர்தினால் ஆண்டகை, இந்தத் தாக்குதலானது ஒரு திட்டமிட்டச் செயலா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
முந்தைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எந்தளவுக்கு உண்மையானவை என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சில நபர்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரிவினர் முயன்றதாகவும், அரச புலனாய்வுச் சேவையின் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்துப் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, தாக்குதல் தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள சக்திகளை வெளிப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை எனச் சுட்டிக்காட்டிய கர்தினால், கடந்த கால அரசாங்கங்கள் தமக்குச் சாதகமான விசாரணைகளையே முன்னெடுத்ததாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளிகள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ‘யுத்த வீரர்’ என்ற லேபிளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சட்டத்திலிருந்து தப்பிக்க எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தினார்.
உண்மை மறைக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனத் தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

