மன்னாரில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பான விசேட தீர்மானங்களை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (2026-04-18) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, முறையற்ற மணல் அகழ்வினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் மற்றும் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் தன்னிச்சையான முறையில் வழங்கப்பட்டுள்ள மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றுச்சூழல் விநாசத்தைத் தடுக்கும் நோக்கில், இனிவரும் காலங்களில் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உரிய அதிகாரிகளின் நேரடி களப் பரிசோதனைகளுக்குப் பின்னரே மணல் அகழ்விற்கான அனுமதியை வழங்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்குத் துணைபோகும் அல்லது ஆதரவு வழங்கும் நிறுவனங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குப் பிரதி அமைச்சர் உத்தரவிட்டார்.
மாவட்டத்தின் வளங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அகழப்படும் மணலில் 40 சதவீதத்தை மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் ஒதுக்கவும், எஞ்சிய பகுதியை ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிக்கவும் இதன்போது புதிய யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த புதிய நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தி, மணல் கொள்ளையைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், உயர் பொலிஸ் அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

