இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய உப ஜனாதிபதி இலங்கைக்கு வருகை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) முற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியத் உப ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இன்றைய தினம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைச் சந்தித்த பின்னர், இந்திய உப ஜனாதிபதி வெள்ளவத்தை கதிரேசன் கோவில் மற்றும் ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரை ஆகியவற்றிற்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெறவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் இரண்டாம் நாளான நாளை (20), இந்திய உப ஜனாதிபதி நுவரெலியா பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன், அங்கு மலையக மக்களைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.



