கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: ஒரு பிள்ளையின் தாய் வெட்டிக்கொலை – கணவன் மற்றும் சந்தேக நபர் கைது

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வட்டவளை, வெலிஓயா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெலிஓயா UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பாததால் கணவன் நேற்று (16) அவரை அழைத்துச் செல்வதற்காக வெலிஓயா சென்றுள்ளார்.


இதன்போது, தனது மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கணவனிடம் தெரிவித்ததையடுத்து, தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞருடனான தொடர்பைக் கைவிடுமாறு கணவன் எச்சரித்த நிலையில், நேற்று மதியம் முதல் நீடித்த இந்த மோதல் இன்று அதிகாலை விபரீதமாக முடிந்துள்ளது. இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 30 வயதுடைய கணவன் மற்றும் கொலையுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் மற்றுமொரு நபர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.