இலங்கை கடற்படையின் அதிரடி நடவடிக்கை: 400 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் நால்வர் கைது

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் தென்கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்தின இழுவைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (16) ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இழுவைப்படகில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தலுக்குப் பின்னால் சர்வதேச தொடர்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சர்வதேச கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு கப்பல் ஒன்றின் ஊடாகவே இந்த போதைப்பொருட்கள் இலங்கையின் இழுவைப்படகிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து சர்வதேச ரீதியிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிபரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த நான்கு மாத காலப்பகுதியில் மட்டும் இலங்கைக் கடல் எல்லைக்குள் பாரிய அளவிலான கேரளா கஞ்சா, ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்காக சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை நூற்றுக்கணக்கான கிலோகிராம் போதைப்பொருட்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான சந்தேக நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையை ஒரு போதைப்பொருள் கடத்தல் மையமாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் தமது தேடுதல் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.