இணையத்தில் லீக் ஆன விஜயின் ‘ஜனநாயகன்’ படம்:
Meiveli Media Team

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் அறிமுக சண்டை காட்சிகள் மற்றும் படத்தின் இறுதி காட்சிகள் இணையத்தில் லீக் ஆன நிலையில் அது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டுச் சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த சூழலில், விஜயின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.
சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஜனநாயகன்’ படம் லீக் செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக அப்பட இயக்குநர் எச்.வினோத் பேசியிருக்கிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ‘ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள்.’ என்று வேதனையாக பதிவிட்டுள்ளார்.
ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

