சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும் மக்களால் களைகட்டும் புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் புரியும் மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக இன்று காலை முதல் கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ்தரிப்பு நிலையத்தில் திரண்டு வருகின்றனர்.

நுவரெலியா, கண்டி மற்றும் மாரவில உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும் பயணிகள் பஸ்தரிப்பு நிலையத்தில் அதிகளவில் கூடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.


​பயணிகளின் வருகை வழமையை விட அதிகமாகக் காணப்பட்ட போதிலும், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பயணிகள், பஸ்தரிப்பு நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், தாராளமான முறையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் எவ்வித சிரமமுமின்றி தமது பயணங்களை மேற்கொள்ள முடிவதாகத் தெரிவித்தனர்.

​குறிப்பாக, நுவரெலியா போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் நீண்ட நேரக் காத்திருப்பு இன்றி பஸ்களைப் பெற்றுக் கொள்ள முடிவதாகத் திருப்தி வெளியிட்டனர். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தமது ஊர்களுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் அனைவரும் இன மத பேதமின்றி ஒருமித்த உணர்வுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.