தென்கொரியாவின் E8 பருவகால வேலைவாய்ப்புகள் ஆரம்பம்: முதல் குழு ஏப்ரல் 14 இல் பயணமாகிறது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்த தென்கொரியாவின் E8 வகைப்பிரிவு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை, புதிய அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் புதிய உடன்படிக்கைகளின் அடிப்படையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மிகவும் அவதூறான மற்றும் சட்டவிரோதமான முறையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக, தகுதியுள்ள பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது அரசாங்கம் பதவியேற்ற பின்னர், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் விசேட தலையீட்டின் மூலம் தென்கொரியாவின் பல மாகாணங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் முதற்படியாக, தென்கொரியாவின் யோன்வுல் மாகாணத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், விவசாயத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்காக 16 இளைஞர், யுவதிகள் அடங்கிய முதல் குழு எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி தென்கொரியா நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

தற்போது தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு E9, E7 மற்றும் E8 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், எட்டு மாத கால பருவகால வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லும் இந்தப் பிரிவினர், ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததும் கட்டாயம் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறு இன்றி எவராவது சட்டவிரோதமாக அங்கேயே தங்கியிருக்க முயற்சித்தால், அது எதிர்காலத்தில் இலங்கையர்களுக்குக் கிடைக்கவுள்ள ஏனைய வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களையும் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாக்கும் என அவர் மேலும் எச்சரித்தார்.
எதிர்காலத்தில் இலங்கையர்களுக்காக மேலும் பல வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சுதத் யாலேகம, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



