விசாரணை அறிக்கைக்குப் பின் அரசாங்கம் வாயடைத்துப் போயுள்ளது: முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர காட்டம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பில் குறுகிய காலத்திற்குள் தணிக்கை செய்து, அரசாங்கத்தின் உண்மையான நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்தியமைக்காக தணிக்கையாளர் நாயகத்திற்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வந்த போதிலும், தணிக்கையாளர் நாயகத்தின் அறிக்கை வெளியானதன் பின்னர் அரசாங்கத் தரப்பினர் பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போயுள்ளதாக அவர் சாடினார்.
ஜனாதிபதி முதல் அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் இந்த நிலக்கரி விவகாரத்தில் சிக்கியுள்ளதோடு, அதனால் ஏற்பட்ட நட்டத்தை தற்போது மக்கள் மீது சுமத்த அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். குறிப்பாக, ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் 15 சதவீதத்தால் அதனை அதிகரிக்கக் கோருவது நிலக்கரி தட்டுப்பாட்டினால் டீசல் மின் உற்பத்திக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே என அரசாங்கம் கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முழுமையான நட்டத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமே அறவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், அந்த நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்டோர் நட்டத்தின் ஒரு பகுதியை மக்கள் மீதும் அரசாங்கத்தின் மீதும் சுமத்துவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
சிங்கள – தமிழ் புத்தாண்டுக்காக மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலேயே வீதிக்கு இறங்கிப் போராடவில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரித்த அவர், புத்தாண்டுக்குப் பின்னர் மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அரசாங்கத்தின் மீதான எஞ்சிய நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிடுவார்கள் என்றார். மேலும், வரலாற்றில் மிக அதிகப்படியான எரிபொருள் விலை இந்த ஆட்சியிலேயே காணப்படுவதாகத் தெரிவித்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் 352 ரூபாவாக இருந்த சூப்பர் டீசல் விலை தற்போது 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, மக்களின் சுமை 248 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை 95 டொலராகக் குறைந்திருந்தாலும், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் யுத்தத்தைக் காரணம் காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாகவும், பிச்சைக்காரனின் காயம் போல யுத்தத்தை அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் சாடினார்.
அத்துடன், தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் சுமார் நான்கு இலட்சத்து தொண்ணூற்றேழாயிரம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், உர மானியம் என அரசாங்கம் கூறும் தொகை போதுமானதல்ல என்றார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பதாகவும், மக்கள் விரைவில் இந்த அரசாங்கத்திற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

