தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

– இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.
– புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில் இருந்தும் P to P நபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றத்தை எளிதாக மேற்கொள்ள வசதி
டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட, வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஒரு முறைமை உருவாகும் அதேவேளை, நாட்டின் முறைசாரா பொருளாதாரத்தின் பங்களிப்பை படிப்படியாக முறையான பொருளாதாரத்திற்குள் உள்வாங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate – MDR) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, Gov Tech நிறுவனம், LankaPay நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பரிமாற்றங்களின் போது நிலவும் தடைகளை நீக்குதல், பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் மக்களை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இது செயற்படுத்தப்படுகிறது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், பரிமாற்றங்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் எமது சமூகத்தில் நிலவினாலும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற நாம் இன்னும் தவறியுள்ளோம். எனவே, மக்களுக்கு மிகவும் எளிதான மற்றும் வினைத்திறனான ஒரு முறையாக இந்தப் புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது:
எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நாம் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறோம். அதாவது எமது பரிமாற்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூகத் தரவுகளை முறையான வெளிப்படைத்தன்மையுடன் திரட்டத் தவறியுள்ளோம். எமது அரசாங்கக் கொள்கையின்படி, மானியங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த இலக்குடைய மக்களை எவ்வாறு தெரிவு செய்வது என்ற சவாலை நாம் எதிர்கொள்கிறோம்.
உதாரணமாக, மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்தது. இதனை நாம் இரண்டு கோணங்களில் பார்த்தோம். எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினருக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஒப்பிட வேண்டும். விலையை அதிகமாக உயர்த்தினால் பொருளாதாரம் சுருங்கும். மறுபுறம் விலையைச் சரியாகச் சீரமைக்காவிட்டால் நிறுவனக் கட்டமைப்பைத் தொடர முடியாத நெருக்கடி ஏற்படும். எனவே, இதனைச் சமநிலைப்படுத்த வேண்டும். அதற்கு மிகவும் பொருத்தமானது தகுதியான மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாகும். ஆனால் அதற்கான தரவுகளைத் திரட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தால் அதிக பலன் பெறுவது யார்? கிராமத்தில் ஒருவர் 05 லீட்டர் டீசல் பெற்றால் அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கும். ஆனால் ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லிட்டர் அடித்தால் அவருக்கு 10,000 ரூபாய் மானியம் கிடைக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவுகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு பணப்பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தப் பரிமாற்றங்கள் ஒருவரின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தும். அதன் அடிப்படையில் மானியம் வழங்குவதற்கான ஒரு அளவுகோலை உருவாக்கலாம். எனவே, இத்தகைய சிக்கலான பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறைமை மூலமான பரிமாற்றங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். அப்போதுதான் மானியங்களைச் சரியான இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
எனவே, ஒவ்வொரு துறையிலான பரிவர்த்தனைகளும் இந்த டிஜிட்டல் முறைமையில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியும்.அதனால் டிஜிட்டல் மயமாக்கல் வேலை திட்டம் எமது பிரதான திட்டமாகும். டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் 15 பில்லியன் டொலர் இலக்கை நாம் கொண்டுள்ளோம். இது வெறும் டிஜிட்டல் துறையை மட்டும் உருவாக்குவதல்ல. விவசாயம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்படும் வினைத்திறன் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.
இருப்பினும், இதனை முறையான வகையில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலப்படுத்துவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். கொடுக்கல் வாங்கல்களுடன் மிக நெருக்கமான ஒரு கலாசாரம் நம்மிடம் உள்ளது. கொடுக்கல் வாங்கல்கள், வைப்புச் செய்தல் என வங்கி முறைமையுடன் மிகவும் முன்னேற்றமடைந்த ஒரு கலாசாரமும் பிணைப்பும் எமது மக்களிடையே காணப்படுகிறது.
ஆயினும், அந்தப் பிணைப்பை பழைய காகிதப் புத்தகத்திலிருந்து புதிய முறைமைக்கு மாற்றுவதற்கு நாம் இன்னும் தவறியுள்ளோம். அதேபோல், அதனை நமக்குத் தேவையான அளவில் கட்டியெழுப்பவும் இன்னும் முடியவில்லை. எனவே, இவ்வாறான கலாசாரத்தைக் கொண்டுள்ள மக்களிடையே இந்தப் புதிய கொடுப்பனவு முறைமைகளை எப்படிக் கொண்டு செல்வது என்பதே எமது முக்கிய எதிர்பார்ப்பாகும். அதற்கு பிரதானமாக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான பரந்த அளவிலான திட்டங்கள் அவசியமாகும். அது குறித்து டிஜிட்டல் அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.
எமது கலாசாரத்தில் பணப்பரிமாற்றங்கள் ஒரு அங்கமாக உள்ளன. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் போது பணம் கொடுக்கிறோம். புத்தாண்டுக்கு பணம் வழங்குகிறோம். இந்த QR முறைமை ஒரு கலாசாரமாக மாற வேண்டுமானால், சமூகப் பிணைப்புகளுடன் தொடர்புடைய அனைத்துப் பரிமாற்றங்களையும் இது பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் இதனை முழுமையாக ஏற்காது.
மக்களின் கலாசாரப் பரிமாற்றங்களை இதற்குள் கொண்டு வர புதிய கருவிகள் மற்றும் மாதிரிகள் தேவை. அனைத்து பரிமாற்றங்களிலும் கேந்திர நிலையமொன்று உள்ளது. அந்த கேந்திர நிலையமான மத்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கினால் இதனை வெற்றியடையச் செய்யலாம். இந்தப் புத்தாண்டு காலத்தில் நடைபெறும் பணப்பரிமாற்றங்களை QR முறைமைக்கு மாற்றும் வகையில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை உருவாக்கினால் அது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையும். எமது சமயம் புதிய விடயங்களை ஏற்கத் தயார், ஆனால் அவை ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும்.
எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளது. ஆனால், அந்தப் புதிய விடயங்கள் ஈர்க்கக்கூடியதாகவும் எளிதாகவும் இல்லையென்றால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்தச் செயல்முறையை உயிர்ப்பிப்பதற்குத் தேவையான வசதிகளை நாம் வழங்க வேண்டும். ஏனெனில், சமூகம் வினைத்திறனான விடயங்களையே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதனால் அரசாங்கம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கொடுத்தால், மிக விரைவாக சமூகத்திற்குள் இந்த வேலைத்திட்டம் பிரபலமடையத் தொடங்கும். எனவே, அதற்கான தேவையான ஆதரவையும் தலையீட்டையும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன:
எமது நாட்டில் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளன. இத்தகைய நாணயத்தாள்களைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தையே நாம் டிஜிட்டல் மயமாக்கப் போகிறோம். தற்போது வங்கி முறைமை நன்றாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89% பேருக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. LankaQR பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும், அதன் பயன் மக்களைச் சென்றடைந்தது மிகக் குறைவு. இதனை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல National QR Adoption Programme இனை நாம் இன்று அறிமுகப்படுத்துகிறோம்.
QR தொழில்நுட்பம் எமது நாட்டில் இருந்தாலும் அதன் ஊடான கொடுப்பனவுகள் குறைவாகவே நடைபெறுகின்றன. எமது நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் 99% இன்னும் நாணயத்தாள்களைச் சார்ந்தே நடைபெறுகிறது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே QR மூலம் பணம் செலுத்தியுள்ளனர். மக்களை ஈர்க்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்தும் அதனை பயன்படுத்தாது குறித்து சர்வதேச நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன. எமது பொருளாதாரத்தைப் போன்றே எமது மனப்பாங்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
தமது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்தால் தெருவோர வியாபாரியிடம் ஒரு இளநீர் வாங்கினாலும் QR மூலம் பணம் செலுத்தும் வசதியை உருவாக்க முடியும். இதற்காக 5,000 ரூபாய்க்குக் குறைவான பரிமாற்றங்களுக்கு சேவைக்கட்டணத்தை நீக்க நிதி நிறுவனங்களுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், குலுக்கல் முறையிலான பரிசுகள் மற்றும் பாரிய பிரச்சாரத் திட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க:
கடந்த காலத்தில் QR முறைமை பிரபலமடையாததற்கான காரணங்களை ஆராய்ந்து, இன்று இரண்டு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். முதலாவது, 5,000 ரூபாய்க்குக் குறைவான பரிமாற்றங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதற்கு ஒத்துழைத்த வங்கிகள் மற்றும் LankaPay நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இரண்டாவது, P to P (நபர்களுக்கு இடையிலான) பரிமாற்றங்கள் இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமடைந்துள்ளன. வாடிக்கையாளர் கடைக்குச் செல்லாமலேயே நபர்களுக்கு இடையே பணத்தை அனுப்ப முடிவதே இதற்குக் காரணமாகும். இனிமேல் QR குறியீட்டை அச்சிட்டு வைத்திருப்பதன் மூலம் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பரிமாற்றங்களைச் செய்ய முடியும்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

