கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழு பிரதமர் தலைமையில் கூடியது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்றைய தினம் (06) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்தக் குழு, ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்த செயல்முறையின் அனைத்து அம்சங்களையும் முறையாக ஒழுங்குபடுத்தி, உயர்தரமான கல்விச் சூழலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க இக்குழுவின் தலைவராகச் செயற்படுவதுடன், இதில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விப் புலமைசார் நிபுணர்கள் பலரும் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

அத்துடன், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சமூகப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை அரச ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பிரதான ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலதிக செயலாளர் (கல்விச் சீர்திருத்தம்) எம். ஏ. வி. எஸ். எதிரிசூரிய இக்குழுவின் அழைப்பாளராகக் கடமையாற்றுகிறார்.
கல்விச் சீர்திருத்தத்திற்குச் சொந்தமான ஐந்து பிரதான தூண்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆராய்ந்து, அவற்றைச் சரியான திசையில் வழிநடத்துவதும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைப்பதும் இந்தக் குழுவின் பிரதான நோக்கமாகும்.

இக்கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த பிரதமர், மனிதவள அபிவிருத்தி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகம், கலைத்திட்ட அபிவிருத்தி, மதிப்பீடு மற்றும் தரம் பார்த்தல், சமூக விழிப்புணர்வு ஆகிய ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய வகையில் விசேட துணைக் குழுக்கள் கூட்டப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சீர்திருத்த பொறிமுறையை வலுப்படுத்தி, அதற்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான வைத்தியர் மதுர செனவிரத்ன, நளின் ஹேவகே உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

