மக்களின் துயரங்களை மறந்த அரசாங்கம்; எதிர்க்கட்சித் தலைவரின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததால் நாடு நெருக்கடியில் – பேராசிரியர் கென்னடி குணவர்தன
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மூத்த பேராசிரியர் கென்னடி குணவர்தன, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வானளாவ உயர்ந்துள்ளதாகவும், மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் எரிவாயு கட்டணங்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் போராட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கடும் கவலைக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, ஏனையோர் வறுமையின் விளிம்பிற்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை உயரும் போது நாட்டில் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் ஒன்று தேவையில்லை என முன்னர் கூறிய தற்போதைய ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் இன்று வெறும் பொய்களாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகச் சாடினார்.
எரிவாயு விலையேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர், இது மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட ஒன்றல்ல எனவும், யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாட்டில் எரிவாயுப் பிரச்சினை காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எரிவாயு விநியோகத்தை புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ள போதிலும், அந்த நிறுவனத்திடம் தொடர்ச்சியாக விநியோகம் செய்வதற்கான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடிய அபாயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த மார்ச் 3ஆம் திகதியே எச்சரித்திருந்தும், அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும், இன்று அதன் பாதிப்புகளை அனுபவிக்கும் போது மாத்திரம் அரசாங்கம் அது குறித்துப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை ஜே.வி.பி சார்ந்த குழுக்கள் சமூக வலைதளங்கள் மூலம் திரிபுபடுத்திச் சேறு பூசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜே.வி.பி ஒரு காலத்தில் தத்துவங்களைக் கொண்டிருந்த போதிலும் இன்று அதிகாரத்தைப் பிடித்த பின்னர் அந்த தத்துவங்கள் அனைத்தும் இல்லாமல் போயுள்ளதாகக் கூறினார். சமூக வலைதளச் செயற்பாட்டாளர்களுக்குப் பணம் வழங்கி எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதை விடுத்து, சகல தரப்பினரும் இணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்திய அவர், அரசாங்கத்தின் இத்தகைய பலவீனமான நிர்வாகத்தினால் எதிர்கால சந்ததியே விநாசமடைந்து வருவதாக எச்சரித்தார். முந்தைய ஆட்சியாளர்கள் உலகளாவிய நெருக்கடிகளைத் திறமையாகக் கையாண்டு மக்களைப் பாதுகாத்த போதிலும், தற்போதைய அரசாங்கத்திடம் போதிய வளங்கள் இருந்தும் அவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாமல் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உதய கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்டமை ஒரு ஜனநாயகப் பண்பு எனவும், அதற்காக அந்தப் புத்தகத்தின் கருத்துக்களுடன் அவர் உடன்படுகிறார் என்று அர்த்தமல்ல எனவும் பேராசிரியர் தெளிவுபடுத்தினார். மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் தாமதமாவது நியாயமற்றது எனத் தெரிவித்த அவர், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள 6 பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர விசாரணை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமே தவிர, இந்த விவகாரத்தை அடுத்த தேர்தலுக்கான கருப்பொருளாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் பேராசிரியர் கென்னடி குணவர்தன தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

