இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் புதிய மைல்கல்: சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் வரலாற்றுச் சாதனை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கழகம் தேசிய அளவிலான பிரதானத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய ‘சம்பியன்ஸ் கிண்ண’ (Champions Cup) நொக்-அவுட் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
கொழும்பு “குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தில்” நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கையின் பாரம்பரியமிக்க சோண்டர்ஸ் கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் களமிறங்கியது.

ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே சென். மேரிஸ் வீரர் டஞ்சுமா கம்பாரி மின்னல் வேகத்தில் ஒரு கோலை அடித்துத் தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை தேடித்தந்தார்.
இருப்பினும், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சோண்டர்ஸ் வீரர் க்ளோவிஸ் ப்ராங்க் ஒரு பதில் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆட்டத்தின் எஞ்சிய பகுதியில் இரு அணிகளும் வெற்றி கோலை அடிக்க கடுமையாகப் போராடிய போதிலும், இரு தரப்பு கோல்காப்பாளர்களும் மிகத் திறமையாகச் செயற்பட்டு கோல் முயற்சிகளை முறியடித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனல்டி அவுட் முறை அமுல்படுத்தப்பட்டது.

இதன்போது சென். மேரிஸ் கழகத்தின் கோல்காப்பாளர் எஸ். ஆர்னிகன் ஒரு கதாநாயகனாகத் திகழ்ந்தார். சோண்டர்ஸ் கழகம் உதைத்த மூன்று பெனல்டிகளைத் தனது அசாத்திய திறமையால் தடுத்து நிறுத்திய அவர், தாமே ஒரு பெனல்டியை கோலாக மாற்றி 3-1 என்ற கணக்கில் தனது அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான தொடர் ஒன்றில் சம்பியனான முதலாவது வடக்கு-கிழக்கு அணி என்ற வரலாற்றுச் சாதனையை நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் படைத்துள்ளது. அத்துடன், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் மோதிய லீக் மற்றும் நொக்-அவுட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாத முதல் வட மாகாண அணி என்ற பெருமையையும் இக்கழகம் பெற்றுக்கொண்டது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். சம்பியன் பட்டம் வென்ற சென். மேரிஸ் கழகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பிடித்த சோண்டர்ஸ் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன. மேலும், சோண்டர்ஸ் வீரர் ரொஜர் பிலிப்பே அதிக கோல்களை அடித்து ‘தங்கப் பாதனி’ விருதையும், விஜயகுமார் அபிஷான் வளர்ந்து வரும் வீரருக்கான ‘தங்கப் பந்து’ விருதையும், மொஹமத் லுத்பி சிறந்த கோல்காப்பாளருக்கான ‘தங்கக் கையுறை’ விருதையும் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றியானது இலங்கை கால்பந்தாட்டத் துறையில் வடக்கு மாகாண வீரர்களின் அபாரத் திறமையை சர்வதேச தரத்திற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.


