கொழும்பு அளுத் மாவத்தையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆசீர்வாத நடைபயணம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கொழும்பு 15, அளுத் மாவத்தையில் அமைந்துள்ள “இயேசு ஜீவிக்கிறார்” (Jesus Lives) திருச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஆசீர்வாத ஈஸ்டர் கொண்டாட்ட நடைபயணம் இன்று மிகவும் பக்திபூர்வமாகவும் எழுச்சியுடனும் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை கொழும்பு ஹெட்டியவத்தை சந்தியில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் நடைபவனி, “உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகிற்கு அமைதியைத் தருகிறார்” எனும் உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி அளுத் மாவத்தை தேவாலயம் வரை பயணித்தது.
இந்த ஆசீர்வாத நடைபயணத்தில் திருச்சபையின் போதகர்கள், சபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விசுவாசிகள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது இயேசுவின் உயிர்த்தெழுதலைப் போற்றும் பாடல்கள் மற்றும் துதிப்பாடல்கள் இசைக்கப்பட்டதுடன், வீதியெங்கும் ஈஸ்டர் திருநாளின் நற்செய்தி மற்றும் அமைதிச் செய்திகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கைகளில் ஈஸ்டர் வாழ்த்து அட்டைகள் மற்றும் விவிலிய வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருமித்த குரலில் துதி கீதங்களை பாடியபடி சென்றமை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஹெட்டியவத்தையில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் பயணித்த இந்த நடைபவனி, அளுத் மாவத்தையில் அமைந்துள்ள “இயேசு ஜீவிக்கிறார்” பிரதான தேவாலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து தேவாலய வளாகத்தில் விசேட ஈஸ்டர் ஆராதனையும், நாட்டின் நல்வாழ்வு மற்றும் சமாதானத்திற்கான விசேட ஆசீர்வாதப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திருச்சபையின் தலைமைப் போதகர், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அன்பு, மன்னிப்பு மற்றும் சமாதானம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிலவ வேண்டும் எனத் தனது ஈஸ்டர் தினச் செய்தியில் வலியுறுத்தினார்.

