உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் 2 பிரதான  செயற்திட்டங்களுக்கு அனுமதி

Meiveli Media Team

உலக வங்கியின் நிதியுதவியுடன் ‘ரிவைவ்’ திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த முதற்கட்டத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உலக வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு இடங்களையும் உலக வங்கிப் பிரதிநிதிகள் குழு, துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இன்றைய கலந்துரையாடலின்போது, இந்த அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன, இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான உட்கட்டமைப்பு வசதிகள் எவை, எதிர்பார்க்கப்படும் திட்ட மாதிரி வடிவங்கள் மற்றும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடக்கு மாகாணத்துக்குக் கிடைக்கப்பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பொருளாதார நன்மைகள் குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராயப்பட்டது.