ஐ எம் எவ் குழுவினருடன் ஜனாதிபதி அநுர குமார சந்திப்பு

Meiveli Media Team

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இந்த  சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவினர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் அதிக தாங்கும் திறன் கொண்ட பொருளாதாரமாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.